வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொண்ட கடன்களை மீள செலுத்துதலின் கீழ் கடந்த ஆண்டில் (2025) அரசாங்கம் 5.1 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்த பொருளாதார அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட மொத்த வெளிநாட்டுக் கடன்களின் அளவு 4.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதனுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வெளிநாட்டு கடன் செலுத்துதல்களில் கணிசமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மீள் செலுத்தப்பட்ட வெளிநாட்டு கடன்கள்
2024ஆம் ஆண்டில் 0.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வட்டி வீதங்கள் 2025ஆம் ஆண்டில் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
சர்வதேச பிணைமுறி தொடர்பான கொடுப்பனவுகள் இந்திய கடன் வசதிகளில் பெற்றுக் கொண்டவற்றுக்கு இந்திய அரச வங்கிக்கு மேற்கொள்ளப்பட்ட மீள்செலுத்துகைகள் மற்றும் ஏனைய இருதரப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் கொடுப்பனவுகள் இந்த அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளன.
கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அரசாங்கத்தின் பெரும்பாலான வெளிநாட்டுக் கடன் மீள்செலுத்துகைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.