கிரிமியாவில் ரஷ்ய இராணுவ வானூர்தி விபத்து - 29 பேர் உயிரிழப்பு!

கிரிமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் 'அன்டோனோவ்-26' (An-26) ரக இராணுவ போக்குவரத்து வானூர்தி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ரொய்டர்ஸ் ஊடகத்தில் வெளியாகிய செய்திகளின் படி, நேற்று (மார்ச் 31) மொஸ்கோ நேரப்படி மாலை 6 மணியளவில் கிரிமியன் தீபகற்பத்தின் வான்பரப்பில் திட்டமிடப்பட்ட பயணத்திலிருந்த குறித்த வானூர்தி, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் முடிவில், வானூர்தி விபத்துக்குள்ளான சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.

விபத்துக்குள்ளான வானூர்தியில் 6 விமானப் பணியாளர்கள் மற்றும் 23 பயணிகள் என மொத்தம் 29 பேர் பயணித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில், வானூர்தியின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்ததில், ஏவுகணைத் தாக்குதல்களோ அல்லது வெளிப்புறத் தாக்குதல்களோ நிகழ்ந்ததற்கான எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை.

இதனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அண்மைய நாட்களாக வான்வழிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்ய இராணுவ வானூர்தி விபத்துக்குள்ளாகியிருப்பது சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post