நியூ டயமண்ட், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்கள் தொடர்பில் ஆய்வுக்குழு

 இலங்கை கடற்பகுதியில் இடம்பெற்ற நியூ டயமண்ட், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்கள் தொடர்பில் பரிந்துரைகளை வழங்க ஆய்வுக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

இலங்கை கடற்பகுதியில் இடம்பெற்ற நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துகள் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளை வழங்க நாடாளுமன்ற சிறப்புக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவான விசாரணைக்கு உரிய நிறுவனங்களிடம் சான்றுகள் பெறப்பட உள்ளன.


முன்வைக்கவுள்ள பரிந்துரைகள்

அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையிலான நாடாளுமன்ற விசேட குழுவில் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான பரிந்துரைகளை அக்குழு முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பிரச்னைகள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை பெறவும், நாளிதழ் விளம்பரங்களை வெளியிடவும் இரண்டு வார கால அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த குழு வரும் 27ம் திகதி மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post