அமெரிக்காவில் ஒரே மாதத்தில் 92,000 வேலைவாய்ப்புகள் பறிபோயின..! பொருளாதார சரிவால் அதிர்ச்சி

அமெரிக்கப் பொருளாதாரம் பெப்ரவரி மாதத்தில் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், சுமார் 92,000 வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மாதாந்திர வேலை இழப்பாகும், இதனால் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.4% ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் போர் மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ள சூழலில், இந்தத் தரவுகள் பொருளாதார வல்லுநர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சுகாதாரத் துறை

பொதுவாக வலுவாகக் கருதப்படும் சுகாதாரத் துறை மற்றும் மத்திய அரசுப் பணிகள் உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் இந்த வேலைவாய்ப்புச் சரிவு பிரதிபலித்துள்ளது.


இந்தத் திடீர் சரிவு வோல் ஸ்டிரீட் பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியதோடு, பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அரசியல் ரீதியான நெருக்கடியையும் கொடுத்துள்ளது.

வெள்ளை மாளிகையின் கொள்கைகளே இந்த நிலைக்குக் காரணம் என ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், எதிர்வரும் மாதங்களில் பொருளாதாரம் மீண்டெழுந்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், வேலைவாய்ப்புச் சந்தையின் இந்த பலவீனம், வட்டி விகிதக் குறைப்பு குறித்து முடிவெடுக்க வேண்டிய அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கிக்கு ஒரு கடினமான சூழலை உருவாக்கியுள்ளது.  

Previous Post Next Post