நியூயார்க்: பிரபல மல்யுத்த விளையாட்டு தொடரை நடத்தும் WWE வரலாற்றில், ஜான் சீனா புதியா சாதனையை படைத்துள்ளார். திங்கட்கிழமை (நவம்பர் 10) நடைபெற்ற 'ரா' (Raw) நிகழ்ச்சியில், டாமினிக் மிஸ்டீரியோவை வீழ்த்தி, தனது 20 ஆண்டு கால மல்யுத்த வாழ்க்கையில் முதல் முறையாக இன்டர்கான்டினென்டல் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜான் சீனா. இந்த வெற்றியின் மூலம், WWE-ன் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான 'கிராண்ட் ஸ்லாம்' சாம்பியன் என்ற அந்தஸ்தையும் அவர் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் என்றால் என்ன?
WWE நிறுவனத்தில் ஒரு வீரர் 'கிராண்ட் ஸ்லாம்' சாம்பியன் என்ற பெருமையைப் பெற, அவர் தனது மல்யுத்த வாழ்க்கையில் WWE சாம்பியன்ஷிப், யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன்ஷிப், டேக் டீம் சாம்பியன்ஷிப் மற்றும் இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் ஆகிய நான்கு முக்கிய பட்டங்களையும் ஒருமுறையாவது வென்றிருக்க வேண்டும். இதற்கு முன் ஜான் சீனா இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் தவிர மற்ற மூன்று பட்டங்களையும் வென்று இருந்தார். தற்போது அதையும் வென்று இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தும் 25-வது வீரர் என்ற பெருமையை ஜான் சீனா பெற்றுள்ளார்.
சவால், சண்டை, சாதனை!
இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி, டாமினிக் மிஸ்டீரியோவின் சவாலுடன் தொடங்கியது. இந்த ஆண்டு ரெசில்மேனியாவில் இருந்து இன்டர்கான்டினென்டல் பட்டத்தை தன்வசம் வைத்திருந்த டாமினிக், ஜான் சீனாவை இகழ்ந்து பேசி, "உங்கள் உச்சகட்ட ஃபார்மில் இருந்ததை விட நான் சிறந்தவன்" என்று சவால் விடுத்தார். உடனடியாக WWE நிர்வாகி டிரிபிள் ஹெச், இருவருக்கும் இடையே இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான போட்டி நடைபெறும் என அறிவித்தார்.
போட்டியின் தொடக்கம் முதலே அனல் பறந்தது. டாமினிக் மிஸ்டீரியோ பலமுறை விதிமுறைகளை மீறி ஏமாற்றி வெற்றி பெற முயன்றார். ஒரு கட்டத்தில், அவர் சீனாவை 'சப்மிஷன்' மூலம் தோற்கடிக்க முயன்றதை நடுவர் கவனிக்கத் தவறினார். இருப்பினும், தனது அனுபவத்தால் நிதானம் இழக்காத ஜான் சீனா, போட்டியின் இறுதிவரை கவனம் சிதறாமல் போராடினார்.
போட்டியின் இறுதிக்கட்டத்தில், டாமினிக் தனது பிரத்யேகமான 'ஃப்ராக் ஸ்ப்ளாஷ்' (Frog Splash) மூவ்-ஐ பயன்படுத்த முயன்றார். ஆனால், அதைத் தடுத்து நிறுத்திய ஜான் சீனா, தனது புகழ்பெற்ற 'ஆட்டிட்யூட் அட்ஜஸ்ட்மென்ட்' (Attitude Adjustment) மூவ்-ஐ பயன்படுத்தி டாமினிக்கை வீழ்த்தி, பட்டத்தைக் கைப்பற்றினார்.
முழுமையடைந்த சாதனைப் பட்டியல்
இந்த வெற்றி ஜான் சீனாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், அவர் தனது மல்யுத்த வாழ்க்கையில் இதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இன்டர்கான்டினென்டல் பட்டத்திற்காகப் போட்டியிட்டதே இல்லை. இதற்கு முன் சிலமுறை நேரடி நிகழ்ச்சிகளில் (House Shows) மட்டுமே இதற்காகப் போட்டியிட்டுள்ளார். தனது மல்யுத்த வாழ்க்கை ஓய்வை நெருங்கும் தருவாயில், இந்த பட்டத்தை வென்று தனது சாதனைப் பட்டியலை அவர் முழுமையாக்கியுள்ளார்.
இதற்கு முன், ஜான் சீனா WWE சாம்பியன்ஷிப்பை 17 முறையும், யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன்ஷிப்பை 5 முறையும், டேக் டீம் சாம்பியன்ஷிப்பை 4 முறையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம், ஷான் மைக்கேல்ஸ், டிரிபிள் ஹெச், கேன், கிறிஸ் ஜெரிகோ, கர்ட் ஆங்கிள், எட்டி குரேரோ போன்ற WWE-ன் ஜாம்பவான்கள் அடங்கிய கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்கள் பட்டியலில் ஜான் சீனாவும் இணைந்துள்ளார். ஜான் சீனாவின் இந்த வெற்றி, அவரது ஓய்வு பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெற்று இருப்பது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.