புதிய சாதனையை படைத்த பதும் நிஷங்க



புதிய இணைப்பு 
இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே, ஒருநாள் போட்டி ஒன்றில் முதன்முதலாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பதும் நிஷங்க படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய (09.02.2024) போட்டியிலேயே இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அத்துடன், இதற்கு முன் அதிகூடிய தனிப்பட்ட ஓட்டங்களை பெற்றிருந்த சனத் ஜயசூரியவின் (189) சாதனையை பதும் நிஷங்க முறியடித்துள்ளார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி, 139 பந்துகளை எதிர்கொண்ட இவர், 8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 20 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 210 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதேவேளை, இன்றைய போட்டியில், இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதலாம் இணைப்பு
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் பேட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியானது, கண்டி, பல்லேகல விளையாட்டு அரங்கில் இன்றையதினம் (09.02.2024) நடைபெறவுள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையில் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளும், மூன்று இருபதுக்கு20 போட்டிகளும், இடம்பெறவுள்ளன.

ஒருநாள் தொடர்

டெஸ்ட் போட்டியை வென்றது போல் ஒருநாள் தொடரையும் வெல்வதே அணியின் நோக்கம் என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மேலும், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இலங்கை ஏழாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.

இரு அணிகளுக்குமிடையில் 11 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் 07இல் இலங்கை வெற்றி பெற்றுள்ளதுடன் ஆப்கானிஸ்தான் அணி 04 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
Previous Post Next Post