20 பயணிகளை விமானத்திலிருந்து இறங்கச் சொன்ன விமானி: ஒரு சுவாரஸ்ய சம்பவம்

 ஸ்பெயின் தீவு ஒன்றிலிருந்து பிரித்தானியாவுக்கு விமானம் ஒன்று புறப்பட இருந்த நிலையில், அந்த விமானத்தின் விமானி, 20 பயணிகளை விமானத்திலிருந்து இறங்க கேட்டுக்கொண்ட சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.


மோசமான வானிலை

கடந்த புதன்கிழமை, ஸ்பெயின் தீவான Lanzarote என்னுமிடத்தீருந்து பிரித்தானியாவின் லிவர்பூலுக்கு விமானம் ஒன்று புறப்படத் தயாராகியுள்ளது.

ஆனால், வானிலை சரியாக இல்லாததால், இரவு 9.45க்குப் புறப்படவேண்டிய விமானம், மணி 11.30ஆகியும் புறப்படவில்லை.  


விமானி விடுத்த கோரிக்கை

அப்போது, பயணிகளிடம் ஒலிபெருக்கி மூலம் பேசிய விமானி, கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அதாவது, வானிலை மோசமாக இருப்பதாகவும், அத்துடன் விமானத்தின் எடை அதிகமாக இருப்பதாகவும், ஓடுபாதையும் சிறியதாக இருப்பதாலும், விமானத்தால் புறப்பட முடியாத நிலை இருப்பதாக தெரிவித்த விமானி, விமானத்தின் எடையை சற்று குறைத்தால் விமானத்தால் புறப்படமுடியும் என்று கூறினார்.

அதாவது, ஒரு 20 பயணிகள் விமானத்திலிருந்து இறங்கினால், அதாவது, இன்றைய பயணத்தை ரத்து செய்தால் விமானம் புறப்படமுடியும் என்றார் அவர்.

விமானியின் கோரிக்கையை ஏற்று, 19 பயணிகள் விமானத்திலிருந்து இறங்க, விமானம் புறப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து இறங்கிய 19 பேருக்கும், விமான நிறுவனம் ஆளுக்கு 500 யூரோக்கள் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post