உச்சநீதிமன்றம் விதித்துள்ள இரவு 10 காலக்கெடுவை நினைவூட்டி, புனேவில் நடைபெற்ற இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
பாதியில் நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி
ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி புனேவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஃபீடிங் ஸ்மைல்ஸ் மற்றும் 2BHK ஏற்பாடு செய்த இருந்த நிலையில், நேரடி இசை நிகழ்ச்சி புனேவின் ராஜா பகதூர் மில் சாலையில் நடத்தப்பட்டது.
அப்போது திடீரென மேடையில் ஏறிய பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது கைக்கடிகாரத்தை காட்டி இரவு 10 மணிக்கான காலக்கெடுவை நினைவூட்டினார், மேலும் நிகழ்ச்சியை நிறுத்துமாறும் கலைஞர்களை கேட்டுக் கொண்டார்.
பொலிஸ் அதிகாரியின் அறிவுரையை தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை நிறைவு செய்து கொண்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு
இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு 10 மணிக்குப் பிறகு இசை நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என்று புனே நகர காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
10 மணிக்கு பிறகு சில நிமிடங்களில் நிகழ்ச்சியை நிறைவு செய்து விட்டு சட்டத்தை பின்பற்றுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறை கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, ஏற்பாட்டாளர்கள் காவல்துறைக்கு ஒத்துழைத்து நிகழ்ச்சியை முடித்து வைத்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

