இலங்கையில் சமூக வலைதளங்களில் மதங்களுக்கு எதிராக தவறான கருத்துகளை, பரப்புபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.
சமூக வலைதளங்களில் மத அவதூறு
இலங்கையில் அதிகரித்து வரும் மத அவதூறுகள் மற்றும் இணையவழி கசப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த, புதிய சட்டத்தை பிறப்பிக்க போவதாக, அந்நாட்டின் மத விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, ஸ்டாண்ட்-அப் காமெடியனான நதாஷா எதிரிசூரியா மதங்கள் குறித்து, சில இழிவான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எதிரிசூரியா மன்னிப்புக் கேட்டுள்ளார். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, கடந்த மே 21ஆம் திகதி அவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் அதிகரித்து வரும் மத அவதூறு சம்பவங்களை தடுக்க, விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.
புதிய சட்டம்
இதன் மூலம் சமூக ஊடகங்களில் மதத்தை இழிவுபடுத்தும் அனைத்து சம்பவங்களும், தடுத்து நிறுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் எதிரிசூரியவின் கருத்துக்கள் தொடர்பான சர்ச்சைகள் ஒரே ஒரு சம்பவம் அல்ல. இம்மாத தொடக்கத்தில், மத அவதூறை பரப்புவதாக ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றம் சாட்டப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மே 15 அன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதுபோன்ற அறிக்கைகள் நாட்டில் மத மோதல்களை உருவாக்கக்கூடும் என்று வாதிட்டு, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும் கடந்த ஜனவரி மாதம், புத்த பெருமானின் புனிதப் பல்லக்கு குறித்து இழிவான கருத்துக்களை வெளியிட்டதற்காக, பிரபல யூடியூபர் செப்பல் அமரசிங்க பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

