காலிமுகத்திடலில் மறுக்கப்பட்ட அனுமதி! வெளியான காரணம்

 காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் துறைமுக நகருக்கு ஏற்றவகையில் அதனை சுற்றியுள்ள சூழலை உருவாக்குவதற்காகவே காலிமுகத்திடலில் போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நேற்று (19.04.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


நாட்டின் பொருளாதார அபிவிருத்தி

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,“காலிமுகத்திடலில் தற்போது போட்சிட்டி அமைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு சிறந்த வேலைத்திட்டமாகும்.

தற்போது அந்த பிரதேசத்தில் போட்டி அமைக்கப்படுள்ளதால், அந்த இடம் மற்றும் அதற்கு சூழவுள்ள இடம் போட்டிக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

அங்கு போராட்டங்கள், பேரணிகள் இடம்பெறுவது பொருத்தம் இல்லை. போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தேவையான அளவு மைதானங்கள் இருக்கின்றன. அங்கு இதனை முன்னெடுக்கலாம்.


அரசாங்கத்தின் தீர்மானம்

அத்துடன் காலிமுகத்திடலில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் காரணமாக அந்த பகுதியில் அமைந்துள்ள உணவகங்களின் நடவடிக்கைகளுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  

அதனால் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு மத நடவடிக்கைகளுக்கு மாத்திரம் குறிப்பிட்ட நேர வரையறையுடன் அனுமதி அளித்து ஏனைய களியாட்ட நிகழ்வு மற்றும் போராட்டங்களை காலிமுகத்தில் நடத்துவதற்கு தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானித்தது.”என தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post