மாலபே மாதிரி ஆண்கள் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில்

 மாலபே மாதிரி ஆண்கள் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா பீடத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’ வேலைத்திட்டத்தின் கீழ் மாலபே மாதிரி ஆண்கள் கல்லூரிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
 
இந்த ஆரம்ப அமர்வின் போது, ​​புதிய கல்வி மறுசீரமைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களால் புதிய மறுசீரமைப்பு முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், ஜனாதிபதி நிதியம், நிறைவேற்றுத் துறையின் வகிபாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்தும் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

 
மாலபே மாதிரி ஆண்கள் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் பெறுமதியைக் குறிக்கும் வகையில் மரக்கன்றுகளும் இதன்போது வழங்கப்பட்டன.
 
ஜனாதிபதி சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, இலங்கை பாராளுமன்ற நிர்வாக உதவி பணிப்பாளர் கே.ஆர். ஹேரத், மற்றும் முப்படை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர், மாலபே மாதிரி ஆண்கள் கல்லூரியின் அதிபர் சிசிர குணரத்ன உட்பட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- ஜனாதிபதி ஊடகப் பிரிவு
Previous Post Next Post