இயலாமையுடய நபர்களுக்கான சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ரீதியில் இயலாமையுடைய நபர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி களுத்துறையில் இடம்பெறவிருப்பதாக இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் "இயலாமையுடைய நபர்களுக்கான உணர்திறன் மிக்க பாராளுமன்றம்” என்ற இலட்சியத்திற்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள இயலாமையுடைய நபர்களிடமிருந்து நேரடி கருத்துக்களைப் பெறுவதற்கான தொடர் நிகழ்ச்சிகளின் இரண்டாம் கட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த பாராளுமன்ற ஒன்றியத்தனால் எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் குறித்த ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.சில்வா அவர்களின் தலைமையில் கடந்த 9ஆம் திகதி கூடியபோதே இது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இந்தத் தொடரின் முதல் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்கள் முறையே பெப்ரவரி 27ஆம் திகதி மட்டக்களப்பிலும், மார்ச் 27ஆம் திகதி பொலன்னறுவையிலும் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.
இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்பாட்டின் ஓர் அம்சமாக அமைச்சுக்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி சுகாதார அமைச்சிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித்.பி பெரேரா, (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம, சந்திம ஹெட்டிஆரச்சி, பத்மசிறி பண்டார, (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.