நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையிலான, கடுகு விதையளவே காணப்படும் ரோபோக்களை சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆய்வாளர்களே இந்த மைக்ரோ ரோபோட்டை உருவாக்கியுள்ளார்கள். இரண்டு மில்லிமீற்றர் அகலமே கொண்ட இந்த ரோபோக்களை வெளியிலிருந்து ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இந்த ரோபோக்கள், நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து, தேவையான மருந்துகளை பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்துக்கே கொண்டு சென்று சிகிச்சையளிக்க உதவும்.
அதாவது, பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு அதிக அளவிலான, அதாவது high dose மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்த மருந்துகளை வாய்வழியாக கொடுக்கும் பட்சத்தில் அவை உடல் முழுவதும் பயணிப்பதால் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆக, அத்தகைய மருந்துகளை இந்த ரோபோக்கள் மூலமாக, பாதிக்கப்பட்ட இடத்துக்கே அனுப்பும்போது, பக்க விளைவுகள் தடுக்கப்படக்கூடும்.
தெளிவாகக் கூறினால், நோயாளிக்குத் தேவையான மருந்து ஒரு கேப்சூலுக்குள் அடைக்கப்பட்டு இந்த ரோபோ உதவியுடன் அவரது உடலுக்குள் அனுப்பப்படும்.
அந்த கேப்சூலில் இரும்பு ஆக்சைட் நானோ துகள்கள் இணைக்கப்பட்டிருப்பதால், காந்த சக்தி உதவியால் அந்த கேப்சூல் நோயாளியின் உடலில் பாதிக்கப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்படும்.
அந்த கேப்சூல் பாதிப்புக்குள்ளாகிய இடத்தை அடைந்ததும், உயர் அதிர்வலை காந்தப் புலத்தால் அது உருக வைக்கப்படும். கேப்சூல் உருகியதும் அதற்குள்ளிருக்கும் மருந்து வெளியாகி, பாதிக்கப்பட்ட இடத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
கால்நடைகள் உடலில் இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்து மனித உடலில் சோதனை செய்யப்பட்டு இந்த சிகிச்சை முறை வெற்றி பெறுமானால், சில குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சையில் அது முக்கிய திருப்புமுனையாக அமையும் என, சுவிஸ் நாட்டு ஊடகத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.