சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்த்தபடி சிறப்பாக விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை படும் மோசமாக இருக்கிறது. ஹைடன், ரெய்னா, வாட்சன் ஆகியோர் போன்ற வீரர்கள் விளையாடிய அணியில் தற்போது ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா விஜய் சங்கர் போன்ற வீரர்கள் ஆடி வருகிறார்கள். இது சிஎஸ்கே அணியின் பலத்தை குறைப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்த வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்தி வந்தனர். அதற்கு ஏதுவான மாற்றங்களை வரும் ஐந்தாம் தேதி டெல்லிக்கு எதிரான சென்னையில் நடைபெறும் போட்டியில் ருதுராஜ் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பலரின் கோரிக்கையும் ருதுராஜ் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்பதுதான். மேலும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கான்வே, சிஎஸ்கே அணிக்காக விளையாடும்போது அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனை சிஎஸ்கே வரும் போட்டியில் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரச்சின் ரவீந்திரா மூன்றாவது வீரராக விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நடு வரிசையில் சிஎஸ்கே அணி தடுமாறி வரும் நிலையில், அந்த இடத்தில் இரண்டு இளம் வீரர்களை பயன்படுத்த சிஎஸ்கே முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதன்படி இளம் வீரர் சாயிக் ரசித் மற்றும் விக்கெட் கீப்பரான வன்ஷ் பேடி ஆகியோரை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வல்லுனர் கிருத்திகா, வன்ஷ் பேடி அதிரடியாக ஆடக்கூடிய வீரர். வன்ஷ் பேடி ஒரு ஓவருக்கு 20, 30 ரன்கள் அடிப்பார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் தொடர்ந்து ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்களுக்கு மேலாக அடிக்கக்கூடிய வீரராக அவர் திகழ்வார். எனவே சிஎஸ்கே அணி வன்ஷ் பேடிக்கு பேட்டிங் வரிசையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதேபோன்று சிஎஸ்கே அணி அன்சூல் கம்போஜை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்வே உள்ளே வந்தால் சாம் கரண் அல்லது ஜிம்மி ஓவர்டன் என இரண்டு வீரர்களுமே வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்கும் என்பதால் கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக இந்திய வீரரை பயன்படுத்த சிஎஸ்கே முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.