தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்றத்துக்கு

இலங்கை பாராளுமன்றம் தொடர்பில் சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசேட பொதுமக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டம் கடந்த 2025.04.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் களரியிலிருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டதுடன், சட்டவாக்க நடைமுறை தொடர்பில் பொதுமக்கள் சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் மூலம் பாராளுமன்றத்தின் முக்கியத்துவம், சட்டவாக்க நடைமுறைகள் மற்றும் பணிகள், குழு நடைமுறைகள் தொடர்பில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன், சட்டமூல வரைபு நடைமுறை தொடர்பிலும் இதில் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சித்திட்டம் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரின் ஆலோசனையில், சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேராவின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

இந்த விசேட நிகழ்ச்சித்திட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ பிரதி அமைச்சர் முனீர் முலாபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் திருமதி ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே ஆகியோரும் கலந்துகொண்டதுடன், இந்நிகழ்ச்சியை பாராளுமன்றத்தின் அதிகாரிகளான எம்.எஸ்.எம். ஷஹீட், யஸ்ரி மொஹமட் மற்றும் பியசிறி அமரசிங்க ஆகியோர் நடத்தினர்.

Previous Post Next Post