தாயை விட பெரிய சக்தி எதுவுமில்ல..நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடம்! பிஞ்சுகள் உயிர்காத்த தெய்வங்கள்

 

பெய்ஜிங்: இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2700-யை கடந்துள்ளது. இந்த நிலையில் மியான்மர் எல்லை அருகே சீனாவின் நகர் ஒன்றில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. அப்போது ஒரு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பாராட்டுதலை பெற்று வருகிறது. 

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.


குறிப்பாக மியான்மர் தலைநகர் நைபியிடவ்வை மையமாகக் கொண்டு காலை 11:50 மணி அளவில் முதலிலும் தொடர்ந்து சில நிமிட இடைவேளையில் இரண்டாவது, மூன்றாவது என அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 

முதல் நில நடுக்கம் 7.7 என்ற ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் 6.4 என்று அளவிலும், 3வது நில நடுக்கம் 4 என்ற அளவிலும் பதிவாகி இருந்தது. மத்திய மியான்மரின் மான்வாவில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக வானுயர கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் நொடிப் பொழுதில் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்தன. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்திலும் பதிவானது. 

அங்கும் ஏராளமான கட்டிடங்கள் சேதமாகி இருக்கிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காங், சட்டுச்சாக் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கத்தின் காரணமாக சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டது. தாய்லாந்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பலி எண்ணிக்கை அச்சம் தரத்தக்க வகையில் உயர்ந்திருக்கிறது.

தொடர்ந்து மீட்பு பணியில் பல்வேறு உலக நாடுகள் கை கோர்த்திருக்கும் நிலையில் இந்தியா சீனா தாய்லாந்து ஆகிய நாடுகள் மீட்பு பணிகளை தொடங்க தங்கள் நாட்டின் வீரர்களையும் நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், மியான்மரில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக 2719 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கும், நிலையில் 2000 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் 300 பேரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் மியான்மர் எல்லை அருகே சீனாவின் நகர் ஒன்றில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. அப்போது ஒரு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பாராட்டுதலை பெற்று வருகிறது. சீனாவின் மியான்மார் எல்லைக்கு அருகில் உள்ள ருயிலி நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கத்தின்போது, ஒரு மகப்பேறு மருத்துவமனையில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டது.


கட்டடங்கள் திடீரென குலுங்கிய நிலையில், குழந்தைகள் வார்டில் குழந்தைகள் இருந்த படுக்கைகள் அதிர தொடங்கியது. அப்போது அங்கு பணியாற்றிய செவிலியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில், நிலநடுக்கத்தால் குழந்தைகள் இருந்த தொட்டில்கள் பலமாக அதிர்ந்த நிலையில், ஒரு செவிலியர் தரையில் முட்டி போட்டு ஒரு பச்சிளம் குழந்தையை மார்போடு அணைத்து காப்பாற்றினார். 

இன்னொரு செவிலியர் மற்ற குழந்தைகள் இருந்த தொட்டில்களை உறுதியாக பிடித்துக் கொண்டு குழந்தைகளுக்கு எவ்வித காயமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், அவர்களது மனிதநேயச் செயல் பலரையும் நெகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் உண்மையான வீரர்கள், பெண்கள் எதையும் சமாளிக்க முடியும் என்று பலரும் செவிலியர்களை பாராட்டி வருகின்றனர். பலரும் அவர்களுக்கு விருது வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post