மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி (kandy) மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (29.7.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டில் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-55 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் வீசுவதுடன் காற்றின் வேகமானது மணிக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும்.
வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும்
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் கரையை அண்மித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
ஓரளவு கடற்பரப்பு கொந்தளிப்பு
அதேநேரம், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகவும் அல்லது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
மீனவ மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.