இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா மீண்டும் சுமத்தக்கூடாது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜயவர்த்தன(Aruni Wijewardane) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனடாவின் பன்னாட்டு அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் கிறிஸ்டோபர்மக்லெனுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், இலங்கை வருவாயீட்டல் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பது, பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் இலங்கை பொருளாதார இராஜதந்திரத்துக்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் போன்றவை தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எடுத்துரைத்துள்ளார்.
அத்துடன் இவை நல்லிணக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு சமாந்தரமாகவே இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் இனப்படுகொலை என்ற தவறான கதைகளை வெளியிடும் விதத்தில் கனடா அண்மைய காலங்களில் உயர்மட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் தொடர்பில் இலங்கையின் ஆழ்ந்த கவலை தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.
கனடா இலங்கையுடன் ஆக்கபூர்வமான விதத்தில் ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தை மற்றும் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.