கோழி இறைச்சியின் விலையை குறைக்க தீர்மானம்!

 உள்நாட்டு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.


விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இன்று (01.08.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதான கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


அமைச்சரிடம் கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 75 ரூபா இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதே சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பதற்கு காரணம் எனவும் அதனை 25 ரூபாவாக குறைக்குமாறும் வர்த்தகர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அமைச்சர், சோளத்திற்கான இறக்குமதி வரியை 25 ரூபாவாக குறைக்கும் யோசனையை ஜனாதிபதியிடம் இன்று சமர்ப்பிப்பதற்கு இணங்கியுள்ளார்.


ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி வீழ்ச்சியடையும் போது அதன் பயனை நுகர்வோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க கோழிப்பண்ணை தொழில்துறையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post