களுத்துறையில் ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Youtubeஇல் துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் வீடியோக்களை பார்த்து தயாரித்த இருவர் துப்பாக்கிகள் மற்றும் அவற்றை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களுடன் நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து T-56 ரக துப்பாக்கி, 5 அடி நீள துப்பாக்கி, 7.62, .39 ரவைகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் இரண்டு கிரைண்டர்கள் மற்றும் கிரில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பதுரலிய சீலதோல பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 21 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் உறவிர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது பதுரலிய பிரதேசத்தில் சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை எரித்து நாசம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரே பிரதான சந்தேக நபர் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
