இலங்கையின் போர்க்குற்றத்துடன் தொடர்புடைய நபர்களை, நல்லிணக்கம் மற்றும் அறிந்துகொள்வதற்காக அழைத்துள்ளமை குறித்து அந்த நாட்டின் மனித உரிமை அமைப்புக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவும் தென்னாபிரிக்காவில் தற்போது முகாமிட்டுள்ளனர்.
கறுப்பினத்தவர்களுக்கு எதிராக தென்னாபிரிக்காவில் நிலை கொண்டிருந்த இன மற்றும் நிறவெறியில் இருந்து தென்னாபிரிக்கா எவ்வாறு மீண்டது என்பது தொடர்பாகவும், இதற்காகத் தென்னாபிரிக்கா அமைத்த 'உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு' தொடர்பாகவும் புரிதல்களை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் தென்னாபிரிக்க அமைச்சர் நலெடி பன்டுரினின் அழைப்பின் பேரில் அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே, தென்னாபிரிக்காவுக்கு வந்துள்ளவர்கள் போர்க்குற்றவாளிகள் அல்லது போர்க்குற்றவாளிகளை ஆதரிப்பவர்கள் என்று தென்னாபிரிக்காவில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்புக்கள் குற்றஞ் சாட்டியுள்ளன.
இது தொடர்பில் தென்னாபிரிக்க மனித உரிமைகள் அமைப்புக்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் உள்ளதாவது :-
1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான உள்நாட்டுப் போரின்போது இழைக்கப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறலை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது.
இவ்வாறானவர்களை எமது நாட்டுக்கு வரவழைத்த தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அழைப்பு கவலையளிக்கின்றது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, பாரதூரமானதும் மனித உரிமைகளுக்கு முற்றிலும் ஒவ்வாததுமான குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை சுமத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு அழைக்கப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகளும் பாரதூரமான போர்க்குற்றங்கள் புரிந்த முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் தென்னாபிரிக்காவுக்கு வந்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட சட்டத்தரணி அவருக்காக பல ஊழல் வழக்குகளில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார், எனவே, இத்தகையவர்களை நாட்டுக்குள் அழைத்தமை தவறு - என்றுள்ளன
